இன்று பொதுவாக எல்லா இடங்களிலும் ஒற்றுமை பற்றி பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களிடையே ஒற்றுமை இல்லையே என்ற ஆதங்கம் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் இருந்து வருவதோடு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையும் நம்மில் பெரும்பாலானவர்களிடம் காணப்படுவதையும் காண முடிகின்றது. உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரள வெண்டும் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடு. ஆனால் கலிமாச் சொல்லி அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையுளும் ஏற்றுக் கொண்ட சமூகம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு பிணக்குகளிலும் சச்சரவுகளிலும் சிக்குண்டு வாழ்வதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒற்றுமை என்ற கோட்பாட்டை அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வழிகாட்டலில் விளங்காமல் மனோ இச்சைப்படி ஒற்றுமைக்கு விளக்கம் தேடிக்கொண்டு அதனைச் செயற்படுத்த முற்பட்டமையே என்று மஸ்ஜித் ஜாமிஃ பள்ளிவாசலில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற குத்பா உரையின் போது மௌலவி நஸ்ரி குறிப்பிட்டார்.
 
ஓற்றுமையாக வாழ்வதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்ட இஸ்லாம் அந்த ஒற்றுமை எந்த அடிப்படையில் இருக்க வேண்டுமென்பது பற்றியும் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களின் மனதில் தோன்றுகின்ற சிந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஒற்றுமைக்கு விளக்கமளித்ததோடு அல்லாஹ்வும் அவனது தூதரும் தந்த விளக்கத்தை மறந்து விட்டு விட்டமையே ஒற்றுமை சீர்குலைந்ததற்குப் பிரதான காரணமாகும்.
 
இன்று இஸ்லாத்தின் தூண்களான ஐந்து கடமைகளையும் விட சமுதாய ஒற்றுமை தான் முதன்மை வகிக்கின்றது என்ற விதத்தில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குர்ஆனுக்கும் ஹதிஸ_க்கும் முரணாக தமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்ட மக்களில் பலர் இந்தக் கருத்தை ஏற்று அவரவருடைய செயற்பாடுகளை அவரவருக்குத் தேவையான விதத்தில் செய்து கொண்டு ஒற்றுமையாக இருப்பதோடு, மற்றவர்கள் இஸ்லாம் என்ற பெயரால் செய்கின்ற செயற்பாடுகள் பிழையாக இருப்பினும் அவை பிழையானவை என்பதை சுட்டிக்காட்டாமல் இருப்பதன் மூலமே இந்ந சமுதாய ஒற்றுமையை சீர்குழைக்காமல் இருக்க முடியுமென்று கூறி வருகின்றனர்.
 
ஆனால் நமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இது தானா?
“ஒரு தவறைக் கண்டால் கையால் தடுக்கவும் அதற்கு சக்தியில்லையென்றால் வாயால் தடுக்கவும் அதற்கும் சக்தியற்றவனாக இருந்தால் குறிப்பட்ட தவறை வெறுத்து ஒதுங்கிச் செல்லவும் இது ஈமானின் இறுதிநிலை” என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதை இவர்கள்  கவனிக்க மாட்டார்களா?.
 
இன்று ஒரு பிரிவினர் மார்க்கத்தை “உசூல்” ( அடிப்படை அம்சங்கள்) என்றும் “புரூஹ்” (கிளை அம்சங்கள்) என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து வைத்தள்ளனர். ஊசூரில் மாற்றுக் கருத்து முன்வைக்கப்பட்டால் அதனை எதிர்ப்பதில் தவறில்லை என்றும் புரூஹ் இல் மாற்றுக்கருத்து முன்வைக்கப்பட்டால் அவற்றை சமுதாய ஒற்றுமை கருதி தட்டிக் கேட்கவோ சுட்டிக்காட்டவோ கூடாது என்றும் ஒரு கருத்தைப்பரப்பி வருகின்றனர்.
உதாரணமாக தொழுகை இல்லையென்றோ அல்லது தொழுகையின் வக்துகளை/ரக்அத்துகளை கூட்டியோ குறைத்தோ யாராவது கருத்துக்களை வெளியிட்டால் அவற்றை எதிர்ப்பதில் தவறில்லை ஆனால் தொழுகின்ற முறையில் அதாவது தக்பீர் கட்டுதல் ருகூஉ,ஸ_ஜூது, அத்தஹிய்யாத்து முறைகள் அல்லது அந்த இடங்களில் ஓத வேண்டிய விடயங்களில் நபிகளாருக்கு யாராவத மாற்றம் செய்தாலும் யாரும் சுட்டிக்காட்டவோ எதிர்க்கவோ கூடாது. அதனால் சமுதாய ஒற்றுமை சிதைந்து விடும் என்பது இவர்களது கருத்து. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்த சில விடயங்களில் ஒத்த கருத்துள்ள வேறு சொற்களைப் பயன்படுத்தியதற்காக ஸஹாபாக்களைக் கண்டித்து திருத்திய பல சம்பவங்கள் ஹதீஸ்களிலே இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறிருக்கும் போது நபிகளாரின் செயல்களுக்கு முற்றுமுழுதாக மாற்றம் செய்யும் போது சமுதாய ஒற்றுமை கருதி மௌனமாக இருப்பதற்கு இவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பதைச் சிந்திக்க வெண்டும்.
 
இவர்கள் நபிகளாரின் வாக்கப்படி கையாலோ நாவினாலொ தீமைகளைத் தடுப்பதில்லை. நபிகளாரின் போதனைக்கு மாற்றமான செயல்கள் நடைபெறுகின்ற இடங்களில் அவர்களோடு சேர்ந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் இவர்களும் சேர்ந்து ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது. கேட்டால் அவை பிழையான விடயங்கள் தான். ஏன்றாலும் சமுதாய ஒற்றுமை கருதி கொஞ்சம் நளினமாக அவர்களுடன் இணைந்து கொண்டோம் என்று கூறுகிறார்கள். நபிகளார் சொன்ன இறுதிக்கட்டமான மனதால் வெறுக்குமாறு ஏவிய விடயத்தைக்கூட ஒற்றுமை கருதி விட்டு விடுகின்றனர்.
 
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்தவை மாத்திரம் தான் மார்க்கம். அவற்றுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பது தான் ஒரு முஸ்லிமின் கடமை. மாற்றமான விடயங்களைச் செய்யாமல் இருப்பதும் அவற்றைச் செய்பவர்களிடம் அவை பிழை என்பதைச் சுட்டிக்காட்டுவதும் அவற்றைத் தடுக்க முயற்சிப்பதுமே நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை என்பதை உணர்ந்து அதனடிப்படையில் செயற்படுவதன் மூலம் மாத்திரமே இஸ்லாம் காட்டிய ஒற்றுமையை யதார்த்தமாக்க முடியும். மாற்றமாக மனோ இச்சையின் அடிப்படையில் யார் யாரோ தீர்;மானித்த கருத்துகளை ஒதக்கி விட்டு உண்மையான முஃமின்களாக வாழ்ந்து மகத்தான சுவர்க்கத்தை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக.
June 28, 2010 at 10:45 am by Media Voice Of Kahatowita
Category: இஸ்லாம், ஊர் செய்திகள்