Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif
Month: April 2010
உற்சாகம் குறைந்த நிலையில் நடைபெற்ற விழிப்புணர்வுக்குழுவின் இரண்டாவது கூட்டம். - April 29, 2010 by Media Voice Of Kahatowita
ஊரில் மாணவர்களின் கல்வி நிலை வீழ்ச்சி ஒழுக்க வீழ்ச்சி சமூக சீர்கேடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தி கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டி சமூக சீர்கேடுகளிலிருந்தும் மார்க்க விரோத செயல்களிலிருந்தும் ஊர்மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒழுங்கு முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த 17ஆம் திகதி கூட்டமொன்று கூட்டபடப்பட்டது தெரிந்ததே.
ஆன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய கஹடோவிட, ஓகொடபொல ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி பள்ளிவாசலை மையப்படுத்திய குழுவொன்றினூடாக இச்செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கில் 2010.04.27ஆம் திகதி இரண்டாவது கூட்டம் கூட்டப்பட்டது. ஏல்லாப் பள்ளிவாசல்களிலிருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்ட போதும் தீர்மானங்கள் எடுக்கக்கூடிய அளவுக்கு அன்றைய கூட்டம் அமையவில்லை.
சிலரது கருத்துக்கள் மிகவும் கடுமையாக இருந்ததோடு ஊரை அதட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற தோரணையில் தூரநோக்கற்று காணப்பட்டது.
மேலும் சிலர் இவ்விடயம் இங்கு கூடியிருக்கின்ற சிலரால் மாத்திரம் செய்யக் கூடியதல்ல என்றும் இன்னும் பல புத்திஜீவிகள், ஊர் முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அவர்களுடைய கருத்துக்களும் பெறப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
ஏற்பாட்டாளர்களில் ஒரு சிலர் ஊரில் அனாச்சாரங்களும் சீர்கேடுகளும் ஏற்படுவதை ஊக்குவிக்கின்றவர்களுக்கு இடம் வழங்கியிருப்பது தொடர்பாகவும் சிலர் கவலையுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது.
எது எவ்வாறாயினும் சகலரையும் நல்வழிக்குக் கொண்டுவருவதென்பது மார்க்க ரீதியான நேர்மையான அணுகுமுறைகளினால் மாத்திரமே முடியும். ஓவ்வொரு குழுவும் தமக்கென ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு தமது அணிக்கு ஆட்சேர்க்கும் தந்திரத்தைக் கையாளுமேயானால் சமூகத்தின் இந்தப்பின்னடைவை தவிர்க்க முடியாது போகும்.
எனவே பள்ளிவாசல் நிர்வாகங்கள் காலத்தின் தேவையை உணர்ந்து நேர்மையாகச் செயற்பட்டால் இடையில் மூக்கை நுழைக்கின்ற கும்பல்களை முறியடித்து ஒரு கட்டுக்கோப்புள்ள ஊராக எமது ஊரை மாற்ற முடியும் என்பதில் சந்தேகமில்லலை.

உங்கள் மீது இறைவனின் அருள்மழை பொழியும் ஸலாம் (முகமன்) கூறுதல் - April 29, 2010 by Media Voice Of Kahatowita
அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).

பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங், ஆயுபோவன்போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.

நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.

கொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்

இந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே!

உலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே! இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.

    மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)

நான் வேலை செய்கிறேன், ஆனால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா? எல்லைகள் வகுக்க கூடாதா? அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.

அடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும்? வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா? போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா? இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும்?! நிம்மதி உண்டாகும்?!. எப்படி சண்டைகள் தீரும்?! இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா? அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி

தொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளில் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)

எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.
இன்று எமது ஊரிலும் படித்தவர்கள் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில பேர் ஸலாம் சொன்னாலும் பதில் சொல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையை நாம் பார்க்கின்றோம். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக!

நேற்று நள்ளிரவு ஊரில் இடி மின்னடன் கடும் மழை – வெள்ளம் ஏற்படும் சாத்தியம் - April 22, 2010 by Media Voice Of Kahatowita
கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவிய போதும் நேற்று 2010.04.21 நள்ளிரவு இடியுடன் கூடிய கடுமையான மழை பொழிந்தது. கடந்த வாரம் இடைக்கிடையே மழை பெய்து வந்த போதும் கடுமையான உஷ்னம் நிலவியது. நேற்று இரவு சாதாரணமான மழை பொழிந்ததோடு நள்ளிரவில் திடீரென இடியுடன் கூடிய கடும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனால் பல வீடுகளில் மின்குமிழ்கள் தொலைக்கட்சிப் பெட்டிகள் கம்பியூட்டர்கள் உட்பட பல மின்சார உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதனிடையே அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்திருப்பதால் இன்றும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.
ஊரில் ஏற்பட்டுள்ள சமூக சீர்கேடுகளை களைய விழிப்புணர்வுக் குழு மயற்சி - April 18, 2010 by Media Voice Of Kahatowita
முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கின்ற எமது கிராமத்தில் அந்நியக் கலாச்சாரமும் இஸ்லாம் வெறுக்கின்ற செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்றமையை கவனத்திற் கொண்டு அவசரமான சீர்திருத்த முயற்சியொன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் கலந்துரையாடலொன்று 2010.04.17 ஆம் திகதி இரவு8.30 மணியளவில் கஹடோவிட முஸ்லிம் ஸ்டடி சேகிள் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உலமாக்கள் உட்பட சமூகம் பற்றிய அக்கறை உள்ள பலரோடு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சமூகசீர்கேடுகள் நடைபெறுகின்ற முறைகள் பற்றியும் பிள்ளைகளைப் பற்றிய பெற்றோரின் அக்கறையின்மை பற்றியும் இன்னம்பல விடயங்கள் பற்றியும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதோடு இவற்றை தீர்ப்பதற்கான முழு அதிகாரம் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களை மையமாக வைத்த மாத்திரமே இச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பது பலரின் அபிப்பிராயமாக இருந்ததால் பள்ளிவாசல்களுக்கு இது பற்றி அறிவித்து பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள் உட்பட்ட விழிப்பணர்வுக் குழுவொன்றை அமைப்பது பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்தோடு தொடர்தும் இம்முயற்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நல்ல முயற்சி வெற்றிபெற அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடிப்பு ; வானெங்கும் புகை மூட்டம்;ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து - April 17, 2010 by Media Voice Of Kahatowita
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து வானில் சாம்பல் தூசி மண்டலம் பரவியுள்ளதையடுத்து உலகம் முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் உலக அளவில் விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.ஐஸ்லாந்தின் அயாபியாபிளாயெர்குதுல் (ay-yah-FYAH’-pla-yer-kut-duhl) பகுதியில் உள்ள பனி மலையில் உள்ள மாபெரும் எரிமலை கடந்த புதன்கிழமை வெடித்தது. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு பல கி.மீ. பகுதிகளில் பரவியுள்ளது.மேலும் எரிமலைக் குழம்பால் உருகிய பனி மலைகளால் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.எரிமலை வெடித்தபோது கிளம்பிய சாம்பல் புகை வானில் பல கி.மீ. தூரத்துக்கு சீறியது. இந்தப் புகை மண்டலம் வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எரிமலை அமைந்துள்ள இடத்திலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள பிரிட்டன் வானிலும் இந்த சாம்பல் பரவியது.இந்தப் புகையில் உள்ள சாம்பல் விமான என்ஜின்களையே செயலிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது என்பதால் இங்கிலாந்து ஜெர்மனி பிரான்ஸ் டென்மார்க் நார்வே ஸ்வீடன் பின்லாந்து பெல்ஜியம் அயர்லாந்து உள்பட வடக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடாவில் சுமார் 8000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதேபோல இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் உள்பட ஆசிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க வளைகுடா ஆஸ்திரேலியா உள்பட ஏராளமான நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா- ஐரோப்பா இடையிலான பெரும்பாலான விமானங்கள் ரத்தாகி விட்டன. இந்த சாம்பல் புகை மண்டலம் கலைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் கூட ஆகும் என்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

 

மனித ரத்தம் – பயனுள்ள தகவல்கள் - April 11, 2010 by Media Voice Of Kahatowita

ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells)இ பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கஹடோவிட வருகை - April 11, 2010 by Media Voice Of Kahatowita
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு. வுpஜித ஹேரத் அவர்கள் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று கஹடோவிட ஹிசாம் ஹாஜியார் வீட்டுக்கு  வருகை தந்தார். வாக்களித்த மக்களுக்கு தமது கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்ததோடு தேர்தல் காலத்தில் தமது கட்சி நடவடிக்கைகளை மேற் கொண்டவர்களுக்கும் விசேட நன்றியைத் தெரிவித்தார்.
ஹிசாம் ஹாஜியார் பாராளுமன்ற உறுப்பினருக்கு பகல் போசனம் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயக தேசிய முண்ணனி ஆதரவாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆதரவாளர்களும் ஹிசாம் ஹாஜியார் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர். அனைவருடனும் மிகவும் சந்தோசமாகவும் சகஜமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாடினார்.

கஹடோவிடவில் இரத்த தான முகாம் - April 11, 2010 by Media Voice Of Kahatowita
கஹடோவிட Y.M.M.A. கிளையின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாகவும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இரத்த தான முகாம் இன்று (2010.04.11) காலை 8.30 முதல் பி.ப. 1.30 வரை அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நிறைவு பெற்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனேகமானோர் வியாபார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்ருக்கும் நிலையில் இம்முகாமை இன்றைய தினம் நடாத்துவது சாத்தியமில்லை என்று Y.M.MA. நிர்வாகிகள் அறிவித்திருந்த போதிலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் விசேட வேண்டுகோளின் பேரிலேயே இம்முகாம் இன்று நடாத்தப்பட்டதாக தெரிய வருகின்றது. 25 பேர்களையாவது பங்குபற்றச் செய்யுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டிருந்த போதிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதோடு இதில் 33 பேர் இரத்ததானம் செய்தமை டாக்டருக்கும் தாதிமார்களுக்கும் மிகுந்த திருப்தியை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிங்களப் பிரதேசங்களில் முகாம்களை ஏற்பாடு செய்ய முடியாதிருப்பதாலும் இரத்த வங்கியில் கையிருப்பு முற்றாக தீர்ந்திருக்கின்ற நிலையிலும் Y.M.M.A. யின் இந்த ஏற்பாடு தமக்கு மிகவும் பிரயோசமாக அமைந்ததாக இரத்த வங்கிக்குப் பொறுப்பான டாக்டர் குறிப்பிட்டார்.

ஜனாஸா அறிவித்தல் - April 6, 2010 by Media Voice Of Kahatowita

கஹடோவிடவைச் சேர்ந்த செல்வன் முஹம்மத் முப்தி  (1 வயது) காலமானார். அன்னார் முஹம்மத் மதனி பர்ஹானா ஆசிரியை ஆகியோரின் புதல்வராவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.04.06) காலை 9.00 மணியளவில் மஸ்ஜித் ஜாமிஃ பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்

ஜனாஸா அறிவித்தல் - April 5, 2010 by Media Voice Of Kahatowita

ஓகொடபொளையைச் சேர்ந்த நிலாப் அவர்கள் காலமானார். இவர் ஐனுல் சாபியாவின் கணவரும் ரிஸ்வான் ரினூஸா ரினாஸ் ஆகியோரின் தந்தையும் ஆவார். ஆன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.04.05) பி.ப. 4.30 மணியளவில் ஓகொடபொள மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்

« old entrys
Daily hadees
------
Recent Comments