கஹடோவிடவைச் சோந்த உம்மு நைமா அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற சுபியான் அவர்களின் மனைவியும் லத்தீப் ஆசிரியர், புஹாரி, மதீனா ஆசிரியை ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.03.31) பி.ப. 5.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளி மையவாடியில் இடம்பெறும்
பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் ‘கல்ப் டெய்லி நியூஸ்’ ,
“தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.
பாஹ்ரேனில் இருக்கும் அவரது சகோதரி தெரிவிக்கையில்,
“இஸ்லாம் மதம் குறித்தும், மதங்களை ஒப்பிட்டும் இரு புத்தகங்களை சாரா மலனி பெரேரா எழுதியுள்ளார். இவற்றுள் ஒன்று ‘இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு’. இந்தப் புத்தகத்தில், ஏன் அவர் மதம் மாறினார் என்பது குறித்து எழுதியுள்ளார்” என்றார்.
நன்றி – வீரகேசரி
இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோ,இச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.
இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -
1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -
சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய ‘சம இரவு தினம்’ (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.
2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-
கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று.
3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.
முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -
இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.
மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?
1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.
2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ‘யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.
3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?
4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்
5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -
a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d.. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.
பொய் பேசுவதன் தீமைகள்: -
1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -
அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)
3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி
4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?’ என்று கூறினர்; (அப்பொழுது) அவர், ‘(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)
5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
…
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலிஇ ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.
எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.
நேர்ச்சை! இது நம் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. நம் தேவைகள் நிறைவேறுவதற்காகவோ அல்லது நமக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள், பிரச்சனைகள் நீங்குவதற்காகவோ நாம் ஏதாவது ஒரு வகையில் நேர்ச்சைகளை செய்கிறோம். பொதுவாக, நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான்” (அல்குர்ஆன்: 2:270)
“மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பார்க்க நேரிட்டால் மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறுவீராக!” (அல்குர்ஆன்: 19:26)
“இம்ரானின் மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறினார்” (அல்குர்ஆன்: 3:35)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும், நேர்ச்சை என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றும், மேலும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய ஒரு வணக்கம் என்றும் நமக்கு விளங்குகிறது. ஏனென்றால் எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அதை அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என்பது இறைவனின் கட்டளை. அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை வேறொருவருக்கு செய்கின்ற போது அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற செயலாகும்.
இந்த வகையில், ஒருவர் அல்லாஹ் அல்லாத ஏனையவர்களுக்காக அதாவது, இறைநேசகர்களுக்காகவோ அல்லது நபிமார்களுக்காகவோ நேர்ச்சை செய்கின்றபோது அது இணைவைக்கின்ற செயலாகிறது. இதை பின்வரும் உதராணம் மூலமாக நாம் அறியலாம்.
உதாரணமாக, ஒருவர் தமது ஊரில் அடங்கப்பட்டிருக்கும் பாதிப் மௌலானாவிடம் அல்லது பக்ததாதில் அடக்கமாகியிருக்கும் முஹியித்தீன் அப்துல்காதிரிடம் நாகூரில் அடக்கமாகியிருக்கும் ஷாகுல் ஹமீது மகானிடம்,
‘ வெளிநாடு செல்வதற்கு எனக்கு விஷா கிடைப்பதற்கு உதவிசெய்யுங்கள். அவ்வாறு எனக்கு விஷா கிடைக்கப்பெற்றால் நான் தங்களின் சமூகத்திற்கு விஜயம் செய்து தங்களின் உண்டியலில் 101 ரூபாய் காணிக்கை செலுத்துகிறேன்’
என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக்கொள்வோம். இந்த நேர்ச்சையை நாம் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்! படிப்பதற்கு மிக எளிமையாக தோன்றுகின்ற இந்த நேர்ச்சையை ஒருவர் செய்து, அதே நிலையில் அவர் இறந்தும் விட்டால், அந்த நேர்ச்சையே அவரை நரகத்தின் அதளபாதாளத்திற்கு நிரந்தரமாக தள்ளக்கூடிய அதிபயங்கரமானதாக இருக்கின்றது. எப்படி என்கிறீர்களா? இதை சற்று விரிவாகப் பார்ப்போம்!
மேற்கண்ட நேர்ச்சையை செய்த ஒருவர் பின்வரும் வகைகளில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவராகின்றார். அவைகள்:
முதலாவது ஷிர்க்: மேலே கூறப்பட்ட இறைவசனங்களான 2:270, 19:26 மற்றும் 3:35 ஆகிய வசனங்களின்படி, இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ‘நேர்ச்சை’ என்னும் வணக்கத்தை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வதவராகின்றார்.
இரண்டாவது ஷிர்க்: அல்லாஹ்விடம் மட்டுமே உதவிதேடவேண்டும் என்ற இறைவனின் கட்டளைகளை மீறி, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கோருவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராகின்றார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” அல்குர்ஆன் (2:107)
இதுபோல, இன்னும் பல வசனங்களில், அல்லாஹ்விடமே உதவி தேடவேண்டும் என்பதை திருமறையின் பல இடங்களில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். பார்க்கவும்: 2:153, 3:150,3:160, 4:45, 9:116 மற்றும் பல வசனங்கள்.
மூன்றாவது ஷிர்க்: அல்லாஹ் தன்னுடைய திருமறையின் பல இடங்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக்கூடாது என்று கூறியிருக்க, அல்லாஹ் அல்லாத பாதிப் மௌலானாவிடம் முஹியித்தீன் அப்துல்காதிரிடம் ஷாகுல் ஹமீது நாயகத்திடம் பிரார்த்தனை செய்து நேர்ச்சை செய்தல்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” அல்குர்ஆன் (7:197)
இதுபோல் இன்னும் பல வசனங்களில் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்யவேண்டும் என இறைவன் ஆணையிடுகின்றான். பார்க்கவும் : 2:186, 50:16
நாம் 7:197 என்ற வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்து சற்று சிந்திப்போமேயானால், இறைவன் திட்டவட்டமாக கூறிய ஒரு பேருண்மை நமக்குப் புலப்படும். அதாவது, ‘அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்’ என்று இறைவன் கூறுகிறான். ஒருவர் தமக்குத் தாமே உதவிசெய்து கொள்ள சக்தியற்றவராக இருக்கும் போது பிறருக்கு எவ்வாறு உதவ முடியும்? இறைவனின் இந்த திருவசனத்தை நாம் சற்று கவனமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நான்காவது ஷிர்க்: தம் கண்முன் இல்லாமல் மறைவாக இருக்கும் பாதிப் மௌலானா முஹியித்தீன் அப்துல்காதிரி நாகூர் ஷாகுல் பாதுஷாவை அழைத்து உதவி கோருதல். இதுவும் ஷரிக்காகும். ஏனென்றால், ஒருவர் தமக்கு முன்னால் இல்லாதிருக்கும் பட்சத்தில் அவரை அழைத்து உதவி கோருவதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத, அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)
இந்த வசனத்தையும் நாம் சற்று சிந்தித்தோமேயானால், கியாமநாள்வரை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்கமுடியாது என அல்லாஹ் கூறுகின்றான். மேலும், இந்த வசனத்தின்படி பார்த்தால், நாம் அழைப்பதையே அவரால் அறிந்து கொள்ள இயலாதபோது நமக்கு அவர் எவ்வாறு உதவ முடியும்?
ஐந்தாவது ஷிர்க்: இறைவனின் பண்புகளில் ஒன்றான ‘ஷமீஉண்’ என்பதை இணை வைப்பதாகும். அதாவது ஒருவர் கப்ரில் அடக்கமாகியிருக்கின்ற பாதிப் மௌலானாவிடம் அல்லது பக்தாதில் அடக்கமாகியிருக்கும் முஹியித்தீன் அப்துல்காதிரிடம் நாகூரில் அடக்கமாகியிருக்கின்ற ஷாகுல் ஹமீது நாயகத்திடம் உதவி கோரும் போது எத்தனை தூரமாக இருந்தாலும் அதையும் தாண்டி கேட்கும் அபூர்வ சக்திபடைத்தவராக இவர்களை கருதுவது. இதுவும் அப்பட்டமான ஷிர்க்காகும்.
ஏனென்றால், ஒருவர், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை தூரத்திலிருந்து அழைத்தாலும் அதைக் கேட்கக்கூடிய சக்தி அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அதுபோல, ஒரே நேரத்தில், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேர்களுடைய கோரிக்கைகளையும் ஏற்று அவர்களுக்கு அதை நிறைவேற்றி வைக்கின்ற சக்தி எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே உரிய பண்பு, ஆற்றலாகும். அந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர்த்து, இவர்களுக்கும் இருக்கிறது என்று ஒருவர் நம்பி அழைத்தால் இவர்களை கேட்பார் என்று திட்டவட்டமாக நம்பும் போது இதுவும் இணைவைத்தலாக மாறுகிறது.
ஆறாவது ஷிர்க்: ஒருவர் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை அறியும் சக்தி அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். ஒருவர் தமது ஊரில் அடங்கப்பட்டிருக்கும் பாதிப் மௌலானாவிடம் அல்லது பக்ததாதில் அடக்கமாகியிருக்கும் முஹியித்தீன் அப்துல்காதிரிடம் நாகூரில் அடக்கமாகியிருக்கும் ஷாகுல் ஹமீது மகானிடம், அழைக்கும் போது அவ்வாறு அழைப்பவர், தம் கண் எதிரே இல்லாமல் இருந்தும் அதை அறியும் அவர்கள்ற்கும் உண்டு என்று நம்புவதும் இணைவைப்பாகும். ஏனென்றால் இது ‘பஷீரன்’ என்று இறைவனின் பண்பிற்கு இணை வைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:265)
“அவன்இ நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான். இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)” (அல்-குர்ஆன் 26:218-219)
இறைவனின் இந்த எளிமையான திருவசனங்களைப் படித்துப்பார்த்தால், நாம் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும் அதை பார்த்து அறிகின்ற சக்தி, ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது! இறைவனின் இந்த வல்லமையை அல்லாஹ் அல்லாதவருக்கு உரியதாக ஆக்குகின்றபோது அதுவும் இணைவைப்பாகின்றது. எனவே தமதூரில் இருந்து தாம் அழைப்பதைபாதிப் மௌலானா பார்க்கிறார் முஹியித்தீன் அப்துல்காதிரி பார்க்கிறார் ஷாகுல் ஹமீது பார்க்கிறார் என்று நம்பிக்கைக் கொள்வதும் இறைவனின் இந்த தன்மையை, வல்லமையை பிறருக்கு பங்கிடுவதன் மூலம் இணைவைத்தவராகிறார்.
ஏழாவது ஷிர்க்: மறைவான விஷயங்களை அறியும் ஆற்றல் பாதிப் மௌலானாவிற்கும்முஹியித்தீன் அப்துல்காதிரிற்கும் ஷாகுல் ஹமீது பாதுஷாவிற்கும் இருப்பதாக நம்புவது. அல்லாஹ் கூறுகின்றான்:
‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்)’ (அல்-குர்ஆன் 10:20)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)
சகோதரர்களே! இந்த வசனத்தை சற்று ஆழமாக நாம் சிந்தித்தோமேயானால், ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். அதாவது, நபி (ஸல்) அவர்களுக்கே மறைவான விஷயங்கள் தெரியாது என்று அறிவிக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் நாம் உதவிகோருவதை, அழைப்பதை, எங்கோ கண்காணாத தூரத்தில் மறைவாக இருப்பவர் அறிகிறார் என்று நம்பிக்கை கொள்வது மேற்கண்ட இறைவசனங்களுக்கு முரணாக அமையாதா?
இது போல மேற்கூறிய நேர்ச்சையின் உதாரணத்திலுள்ள ஷிர்க் மற்றும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எனவே சகோதரர்களே! நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் என்பதையும் அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும் என்பதையும் உணர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை. உதாரணமாக மேற்கண்ட நேர்ச்சையில் ஒருவர் நேர்ச்சை நிறைவேறிவிட்டால் நாகூர் தர்ஹாவிற்கு செல்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் இந்த நேர்ச்சையின் செயல், ‘மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜதுந் நபவி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய இம்மூன்று இடங்களைத் தவிர வேறெங்கும் நன்மையை நாடி பிரயாணம் செய்யக்கூடாது’ என்ற நபிமொழிக்கு மாற்றமானது ஆகும்.
மேலும், ஒருவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்திருந்தால் அவர் அதை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆகவேண்டும். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்:
“நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்” (அல்குர்ஆன்: 76:7)
நேர்ச்சை குறித்த நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி:
“நேர்ச்சையானது விதியில் எழுதப்படாத எந்த ஒன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்சை அவனைக் கொண்டு செல்கிறது. நேர்ச்சை செய்வதன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கி விடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒருவர் அல்லாஹ்வுக்கு அல்லாமல் வேறெருவருக்காக, அதாவது அவுலியாவுக்கோ அல்லது நபிமார்களுக்கோ செய்துவிட்டார்; ஆனால் இப்பொது உண்மையை உணர்ந்துவிட்டார். இப்போது என்ன செய்ய வேண்டும்?
இதற்கும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் விடையிருக்கின்றது:
“அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்” ஆதாரம் புகாரி, திர்மிதீ ,நஸயீ.
முடிவாக மேற்கண்ட விளக்கங்களின் மூலமாக நாம் அறிந்தது என்னவென்றால்,
நேர்ச்சை என்பது மார்க்கத்தில் அனுமதிக்கபட்ட ஒன்று
நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும்
அல்லாஹ்வுக்கு அல்லாத வேறொருவருக்கு நேர்ச்சை செய்தால் அது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படமாட்டாத ‘ஷிர்க்’ என்னும் மாபெரும் பாவமாகும் (அல்-குர்ஆன் 4:116)
ஒருவர், அல்லாஹ்வுக்காக மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் நேர்ச்சை செய்திருந்தால் அதை அவசியம் நிறைவேற்றியே ஆகவேண்டும்
அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற விதத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றத் தேவையில்லை
இறுதியாக, நேர்ச்சையானது விதியில் எழுதப்படாத எந்த ஒன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்சை அவனைக் கொண்டு செல்கிறது. நேர்ச்சை செய்வதன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான்’ என்ற நபிமொழியை அறிய முடிகிறது
அல்லாஹ் மிக அறிந்தவன்.
எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.
மணமக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச்
செய்துள்ளனர். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த
செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ‘பாரகல்லாஹு லக’ (அல்லாஹ் உனக்கு பரகத் – புலனுக்கு எட்டாத பேரருள் – செய்வானாக) எனக் கூறினார்கள்.
நூல்:புகாரி 5155,6386
இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக’ என்று கூறி வாழ்த்தலாம்.
‘பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்’ என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.
நூல்:அஹ்மத் 15181
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது ‘பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’ என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599
‘அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில்
உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக’ என்பது இதன்பொருள்.
ஒவ்வொருவரும் இந்த
துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.
அரசுக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் முஸ்லிம்கள் எல்லா உரிமைகளையும் இழக்க நேரிடும் என எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முண்ணனியில் போட்டியிடகின்ற மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசிய முண்ணனி வேட்பாளர்களை ஆதரித்து கஹடோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு முன்னால் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு பிரச்சினைகளைச் சந்தித்திருக்கின்ற இந்த நிலையில் இத்தேர்தலில் மிகவம் புத்திசாலித்தனமாக எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். பல போராட்டங்களுக்கு மத்தியில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை பலமிழக்கச் செய்வதே அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தர வேண்டும் என்று கேட்பதன் இரகசியமாகும். அத்தோடு அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கும் திறைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் இத்தருணத்தை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்று வரலாறு படைக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பல வருடங்களாக அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்து முஸ்லிம் சமூகத்தின் மீது எந்த விதமான அக்கறையும் இன்றி இருந்து விட்டு தற்போது தேர்தல் காலத்தில் மிக மிக அன்பாகப் பழகி சில சில்லறைக்காசுகளை வீசுகின்ற போது அவற்றுக்கு முஸ்லிம் சமூகம் ஏமாறக்கூடாதென்றும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய வேட்பாளர் சரணலால் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஜௌஸி ஹாஜியார் ஆகியோர் உட்பட மற்றும் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தை கஹடோவிட ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பாரளுமன்றப் பொதுத் தேர்hதல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில் என்றுமில்லாதவாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்ட்சியின் செல்வாக்கு ஊரில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நேற்றிரவு ஊருக்கு வருகை தந்த அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான லசந்த அளகியவன்ன அவர்களை வரவேற்க பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர்.
பாரம்பரியமாக சுதந்திரக்கட்சியை ஆதரித்து வந்தவதவர்களுடன் புதிய குழுக்களும் இணைந்து கொண்டுள்ளமையும் ஆர்ப்பரிக்காமல் அரசியலில் ஈடுபடுகின்ற சிலர் பகிரங்கமாக சுதந்திரக்கட்சியை ஆதரிக்க முன்வந்துள்ளமையும் ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்த சிலர் இரகசியமாக ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றமையும் இவ்வாறு ஆளும் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் இத்தேர்தல் பற்றி இதுவரை ஊரில் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதோடு மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.


பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.
இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.
திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.
புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது” என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்.
மேல் மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற வேட்பாளருமான ருவன் விஜயவர்தன அவர்களின் ஏற்பாட்டில் கஹடோவிட தாய்மார் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் இலவச முதலுதவிச் சிகிச்சை பயிற்சி முகாமொன்று நேற்று இடம்பெற்றது. இந்த பயிற்சியை மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் டாக்டர் துர்கா அவர்கள் நடாத்தினார். 50 பேருக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முகாமின் இறுதியில் தாய்மார் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு முதலுதவிக்கான பொருட்கள் அடங்கிய பெட்டியொன்றும் (FIRST AID BOX) பிரதேச இளைஞர்களது பாவனைக்கான விளையாட்டு உபகரணத் தொகுதியொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமதி விஜயவர்தனவும் கலந்து சிறப்பித்தார்.