கஹட்டோவிட்டாவின் வரலாற்றில் முதன் முறையாக இம்முறை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஊரில் பெரும்பாலானவர்களின் பங்களிப்புடன் முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஊர் மக்கள் சொந்தமாக வழங்கும் குர்பானிக்கான பிராணிகளும் வெளியிடங்களில் இருந்து தனவந்தர்கள் வழங்கும் பிராணிகளும் பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுக்கப்படவுள்ளன. SEDO நிறுவனத்தின் நீண்ட நாள் முயற்சி இம்முறை கைகூடவுள்ளதாக அங்கத்தவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக SEDO கலாச்சார நிலையத்தில் “இம்முறை ஹஜ் பெருநாளும் ஊர் ஒற்றுமையும்” என்ற தலைப்பில் கடந்த வாரம் சொற்பொழிவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. SEDO நிறுவனத்தின் அயராத முயற்சியால் முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளி மஸ்ஜிதுன்னூர் உற்பட மேலும் சில அமைப்புகளை ஒற்றுமைப்பட வைத்ததாக அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இதற்கான கூடுதலான பங்களிப்பை தமது அமைப்பு வழங்குவதாகவும் இதே போன்று இன்னும் பல பணிகளை அனைவரையும் இணைத்தக் கொண்டு முன்னின்று செய்யப் போவதாகவும் SEDO அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.
குட்டி ஆறு பாலம் போக்குவரத்துக்கு திறப்பு
கஹட்டோவிட்டவையும் நாகொடையையும் இணைக்கின்ற அத்தனகல்ல ஓயாவின் கிளையான குட்டி ஆற்று (ஓடை) க்குக் குறுக்காக புதிதாக அமைக்கப்பட்ட பாலம் அண்மையில் மக்களது பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிட்டம்புவ பிராந்திய பொறியியலாளர் ஜனாப் நாகூர் பிச்சையின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலத்தை பாராளுமன்ற உறுப்பினரும் அத்தனபல்ல தொகுதி ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளருமான திரு. சரண குணவர்தன திறந்து வைத்தார். பொறியியலாளர் ஜனாப் நாகூர் பிச்சை அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.