யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவிற்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.
ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.
ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:
عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).
நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:
قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائيஇ أحمد).
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போதுஇ நபியவர்கள்: மனிதர்கள் ரஜப்இ ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயிஇ அஹ்மத்).
عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا ழூ (متفق عليه).
நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது. நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.
விடுபட்ட நோன்புகளை நோற்றல்:
عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).
‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.
ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).
‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).
உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்:
‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ (அத்துகான் 44: 3,4).
இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).
மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியில் எந்த தொடர்பும் இல்லை.
ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.
பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.
ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..
‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்.
“நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார், இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 போன்ற கிரந்தங்களில் நபித்தோழர் அனஸ் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1.இமாம் புகாரி அபூ ஹாதிம் போன்றோர் ஸாஇதாவை மிக பலஹீனமானவர் என்று விமரிசித்துள்ளனர்.
2.அதே போன்று ஸியாத் அந்நுமைரி ஒருபொருட்டே இல்லை என இப்னு மஈன் விமரிசித்துள்ளார்.
இப்னு ஹஜர் அவர்கள் தப்யீனுல் அஜப் என்ற தனது ரஜப் மாதம் பற்றிய நூலில் இந்தச் செய்தியை பலஹீனப்படுத்தியுள்ளார். பார்க்க பக்கம் 40. இந்த பலஹீனமான செய்தியை குறுஞ் செய்திகள் மூலம் பலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் இது பலஹீனமான ஒரு செய்தி என்று உணர்ந்துகொள்ள இன்னொரு குறுஞ்செய்தி மூலம் சகோதரர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறோம்
நன்றி http://www.kahatoweta.blogspot.com.
தவ்ஹீத் முழுமை அடைவதற்கு மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதோடு வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதலையும் உறுதியாக நம்பவேண்டும். இவற்றிற்கு ஆதாரமாக, அல்லாஹ் தான் திருமறையில் மிகத் தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்கள் மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதை மட்டும் நம்பினார்கள் என்று கூறுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘உங்களுக்கு வானத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக” (அல்-குர்ஆன் 10:31)
“மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?” (அல்-குர்ஆன் 43:87)
“இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?’ என்று நீர் கேட்பீராகில்: ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். (அதற்கு நீர்) ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவீராக. எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 29:63)
மக்கத்துவாசிகள் அல்லாஹ் தான் படைத்தவன், பாதுகாப்பவன் மற்றும் தங்களுடைய கடவுள் என்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அல்லாஹ்வை பொறுத்தவரையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு இந்த அறிவு மட்டும் போதாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை” (அல்-குர்ஆன் 12:106)
முஜாஹித் (இப்னு அப்பாஸின் மிகச்சிறந்த மாணவர்) அவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளிக்கையில், அல்லாஹ் தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ்வோடு மற்ற கடவுள்களை வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான ஹஜ், தான தர்மங்கள், நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை மற்ற கடவுள்களுக்கு அர்ப்பணித்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை இப்றாஹீம் நபியின் வழித் தோன்றல்கள் என்றும் கூறிக் கொண்டனர். இவர்களின் இந்த கூற்றுக்காக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்.
“இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை” (அல்-குர்ஆன் 3:67)
சில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு அதிகமான சான்றுகள் காணப்படுகின்றது. உதாரணமாக ஜுஹைர் என்ற கவிஞர் ‘அது தாமதப்படுத்தப்பட்டுள்ளது’ அல்லது ‘மறுமை நாளுக்காக பாதுகாக்கப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் .
அந்நாரா என்ற கவிஞர் ‘ஓ எபிலே மரணத்தை விட்டு எங்கே தப்பித்து ஓடுகிறாய்? என் இறைவன் அதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டான்’ என்று கூறியுள்ளார்.
மக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்ற கடவுள்களை வழிபட்ட காரணத்தால் இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான் .
ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மேலும் நபிமார்கள் எடுத்துச் சென்ற செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்கவழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்-குர்ஆன் 51:56)
“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)
படைக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். மனிதன் என்பவன் குறிப்பிட்ட வரையறைக்குள் படைக்கப்பட்டவன். ஆகையால் நிகரில்லா படைத்தவனின் செயல்களை முழுவதும் அறிந்துகொள்ள முடியாதவனாக உள்ளான். ஆகையால் இறைவன் அவனை வணங்குவதை மனிதனின் ஒரு பகுதியாக ஆக்கினான். மேலும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்குவதற்காக நபிமார்களையும் வேதங்களையும் அனுப்பினான். இவற்றின் நோக்கமெல்லாம் முன்பே விளக்கியதுபோல வணக்க வழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்த வேண்டும் என்பது தான். இதற்கு மாறு செய்பவர்கள் மிகப் பெரும்பாவமான இறைவனுக்கு இணை கற்பிக்கிறார்கள். சூரா பாதிஹாவில் இறைவன் கூறுவது போல ஒவ்வொரு முஸ்லிமும் (தொழுகையில்) குறைந்தது 17 முறை கூறுகிறான்: -
“(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்” (அல்-குர்ஆன் 1:5)
முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வணக்க வழிபாடுகளில் ஒருமை தத்துவத்தை உறுதி செய்கிறார்கள். “தொழுகையில் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடுங்கள்” (திர்மிதி)
இறைவன் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறான். ஆகையால் எந்தஒரு இடைதரகரும் தேவையில்லை உதாரணாமாக: -
“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக” (அல்-குர்ஆன் 2:186)
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)
வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்பது அனைத்து வகையான இறைவனுக்கு இணை வைத்தலையும் நிராகரிக்கிறது. யாராவது ஒருவர் இறந்தவர்களிடம் பிரார்த்தித்து உதவி தெடினால் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். ஏனெனில் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய படைபினங்களுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“பிராத்தனையும் வணக்கமாகும்” (அபூதாவூத்)
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: -
‘(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்’ என்று கேட்டார். (அல்-குர்ஆன் 21:66)
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்-குர்ஆன் 7:194)
யாராவது ஒருவர் நபிமார்களிடமோ, மதகுருமார்களிடமோ, ஜின்களிடமோ அல்லது மலக்குகளிடமோ உதவி கேட்டால் அல்லது அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி கேட்குமாறு பிராத்தனை அல்லது வேண்டுதல் அல்லது முறையிடுதல் செய்தாலோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாவார்கள். அறியாதவர்களாய் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு ஆபத்தில் இருப்பவற்களுக்கு அபயம் அளிப்பவர் என்று அளிக்கப்பட்ட பட்டம் கூட இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய செயலாகும்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் “வணக்கங்கள்” என்பது நோன்பு, ஜகாத், ஹஜ் மற்றும் குர்பானி கொடுத்தல் போன்றவற்றை விட அதிகமானதாகும். ‘வணக்கம்’ என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடான அன்பு, நம்பிக்கை மற்றும் பேரச்சம், பயம் ஆகியவையும் உள்ளடங்கும். அல்லாஹ் இவைகளைப் பற்றி விளக்கி இவை அதிகமானால் வரக்கூடிய பாதிப்புகளையும் பற்றி எச்சரித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்-குர்ஆன் 2:165)
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான். (அல்-குர்ஆன் 9:13)
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) ‘அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்’ என்று கூறினர். (அல்-குர்ஆன் 5:23)
வணக்க வழிபாடுகள் என்பது தன்னை முழுவதுமாக கீழ்படிவதாலும் மேலும் அல்லாஹ் என்பவன் சட்டதிட்டங்களை முழுமையாக கொடுக்கக்கூடியவன் என்பதாலும் ஷரீஅத் அடிப்படையிலான சட்டங்கள் இல்லாமல் மற்ற சட்டதிட்டங்களை அமலாக்குவது ஒருவகையான இறை நிராகரிப்பாகும். மேலும் இது போன்ற சட்டங்களை நம்புவது அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடுவது போன்றதாகும்.
நிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம் அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள். இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள் முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (அல்-குர்ஆன் 5:44)
ஒரு முறை நபித்தோழர் அதீபின் ஹாதிம் (ரலி) (கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின் வரும் வசனத்தை ஓத கேட்டார்கள்.
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்-குர்ஆன் 9:31)
இந்த வசனத்தை ஓதக்கேட்ட அந்த நபித்தோழர் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பக்கம் திரும்பி “அல்லாஹ் அவர்களுக்கு ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்கவில்லையா?” என்று கூறிய போது “ஆம்” (என்று அந்த நபித்தோழர்) என்று கூறினார்கள். அப்போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறு தான் அவர்களை வணங்கினார்கள்” என்று கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி.
ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைபடுத்துவதில் முக்கியமான ஒன்று ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்துவதாகும். முக்கியமாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இறக்குமதி செய்யப்பட்டு கம்யூனிஸ மற்றும் முதலாலித்துவ கொள்கைகளின் அடிப்டையில் அரசாங்கம் செய்கின்ற, தன்னை “முஸ்லிம் நாடுகள்” என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இறைவனின் சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முன்வரவேண்டும். இந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டம் என்பது காலாவதியான அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் புத்தகத்திலும் மதச்சார்பற்ற சட்டங்கள் அமலிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் வாழ்க்கையின் அனைத்து வகையிலும் பொருத்தமான இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். அல்லாஹ் அதற்கு பேரருள் புரிவானாகவும்.
மனித குலத்தின் மாபெரும் விரோதியான ஷைத்தான் மனிதர்களை வழிகெடுத்து அவர்களை அழிவின்பால் இட்டுச்சென்று இறுதியில் நரகில் சேர்க்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான். இதற்காக இறைவனிடமே அவன் சவால் விட்டு வந்திருப்பதை அல்-குர்ஆன் நமக்கு எச்சரிக்கின்றது.
“(அதற்கு இப்லீஸ்) ‘நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்’ என்று கூறினான். ‘பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன். ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்’ (என்றும் கூறினான்). அதற்கு இறைவன் ‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறினான்” (அல்-குர்ஆன் 7:16-18)
மனிதர்களின் எண்ணங்களில் வீணான சந்தேகங்களை உருவாக்கி அவர்களை வழிகெடுப்பதுவும் மனித குலத்தின் எதிரியான ஷைத்தானின் ஒரு வழியாகும். நபி (ஸல்) அவர்கள், இதுபோன்ற விஷயங்களில் நம்மை எச்சரித்திருக்கிறார்கள்.
“ஷைத்தான் உங்களில் ஒருவரிடம் வந்து, இவற்றை யார் படைத்தது, இவற்றை யார் படைத்தது என்று கேட்டு, உன்னுடைய இறைவனை யார் படைத்தது என்று கேட்பான். இது போன்று ஒருவருக்கு நிகழ்ந்தால், அவர் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடி, அது போன்ற எண்ணங்களை விட்டுவிட வேண்டும்” (ஆதாரம் : புகாரி)
மேலும் இது போன்ற சந்தர்ப்பத்தில், நபி (ஸல்) அவர்கள் நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளாவன:
(1) அல்லாஹ்விடம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டவராக அவனிடமே பாதுகாவல் தேடவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 7:200)
(2) எந்த விஷயத்தில் இத்தகைய ஷைத்தானிய ஊசலாட்டம் ஏற்பட்டதோ அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதிலிருந்து விடுபட்டு மற்ற பயனுள்ள விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தங்களுக்கு வீணான சந்தேகங்களும் ஊசாலாட்டங்களும் ஏற்பட்டு அதனால் தாம் அவதியுறுவதாக கூறியிருக்கிறார்கள்.
சில நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எங்களின் இதயங்களில் நாங்கள் யாரும் துணிந்து கூற இயலாத அளவிற்கு சில எண்ணங்களை நாங்கள் காண்கிறோம்’ என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உண்மையில் அதை நீங்கள் கண்டீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவாகள் (நபித்தோழர்கள்) ஆம் என்றார்கள். ‘அது தான் உண்மையான இறை நம்பிக்கையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
இறை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் தான் ஷைத்தான் அதிகமாக வீணான சந்தேகங்களையும் ஊசலாட்டங்களையும் ஏற்படுத்துவான். இறை நிராகரிப்பவர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதோடல்லாமல் அவர்களை தன் விருப்பம் போல் ஆட்டுவிக்கவும் செய்கின்றான்.
“அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள். எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை – ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான். “ (அல்-குர்ஆன் 34:20-21)
மனித குலத்தின் விரோதியான ஷைத்தான் மக்களை வழிகெடுத்து அவர்களுடைய எண்ணங்களில் சந்தேகத்தை உண்டாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான். அவனை வெற்றி கொள்ள வேண்டுமெனில் அல்லாஹ்வுடைய உதவியைத் தேடி ஷைத்தானைப் பற்றி அதிகமாக தெரிந்து அவனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் தயார்செய்து கொள்ளவேண்டும்.
ஷைத்தானை வெற்றிக் கொள்ளத் தேவையான ஆயுதங்கள்:
(1) அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்த வழிமுறையைப் பின்பற்றுதல் மேலும் தவறான வழிமுறைகளில் இருந்து தவிர்ந்துக் கொள்ளுதல்:
ஒவ்வொரு புறத்திலிருந்தும் ஷைத்தான் மக்களை அழைக்கின்றான். ஆகையால் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த சட்டங்களை கடைபிடித்து அவன் தடுத்துள்ளவைகளை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்” (அல்-குர்ஆன் 2:208)
(2) ஒருவர் அல்-குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் முறையே பின்பற்றினால் அவர் ஷைத்தானை விரட்டி அடித்து அவனை கோபமுண்டாக்கிவிடலாம்:
அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஆதமுடைய மகன் குர்ஆனில் ஒரு வசனத்தை ஓதி ஸஜ்தா செய்யும் போது, ஷைத்தான் அங்கிருந்து விலகி அழுதுகொண்டு செல்கின்றான். ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்ய கட்டளை இடப்பட்டால் அவன் செய்கின்றான். ஆகையால் அவனுக்கு சொர்க்கம்; எனக்கு கட்டளையிடப்பட்டபோது நான் நிராகரித்தேன்; எனக்கு நரகம் தான்! நாசமுண்டாகட்டும்” (ஆதாரம் : முஸ்லிம்)
(3) பின்வரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் எப்படி பாதுகாப்புத் தேடுவது என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகின்றது:
கழிவறையில் நுழையும் போது: ‘அல்லாஹூம்ம இன்னீ அவூதுபிக்க மினல் குப்தி வல் கபாயித்’
பொருள் : ”ஆண் பெண் ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்’
கோபமாக இருக்கும் போது: ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ராஜீம்’
பொருள் : ‘விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்’
உடலுறவின் போது: ‘பிஸ்மில்லாஹ் அல்லாஹூம்ம ஜன்னிப்னல் ஷைத்தான் வ ஜன்னிப்னல் ஷைத்தான மா ரஜக்தனா’
பொருள் : ‘இறைவா! ஷைத்தானை விட்டும் எங்களை தூரமாக்கி வைப்பாயாக! எங்களுக்கு அருளப்போகும் சந்ததியையும் ஷைத்தானை விட்டும் தூரமாக்கி வைப்பாயாக!’
கழுதை கத்தும் போது: ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ராஜீம்’
பொருள் : ‘விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்’
குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் போது: ‘அவூதுபில்லாஹில் ஸமீவுல் அளீம் மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’
பொருள் : ‘எல்லாற்றையும் கேட்பவனாகிய மகத்தான அல்லாஹ்விடத்தில் ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்’
(4) இறைவனை திக்ர் செய்துகொண்டே இருத்தல்:
இறைவனுடைய நினைவு ஒரு மனிதனை பாதுகாக்கும்.
(5) “நல்லவர்களாக நம்மிடம் வந்து நமக்கு நேர்மையான அறிவுரை கூறுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நல்லவர்களாக இருந்திருந்திருந்தால் தனக்குத்தானே நன்மை செய்துகொண்டிருக்கமுடியும்! அவ்வாறில்லாமல் அவன் தனக்குத்தானே அநியாயம் செய்துகொண்டவனாகிவிட்டான். நீங்கள் தொழுதுகொண்டிருக்கும்போது தொழுகையை சுருக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினால் நீங்கள் தொழுகையை நீளமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் உளூ முறிந்துவிட்டது என்று கூறினால் ‘நீ பொய்யன் என்று கூறுங்கள். இறந்தவர்களுக்கு கேட்கச் செய்யவும் நன்மை மற்றும் தீமைச் செய்யமுடியும் என்று என்று கூறினால் ‘நீ பொய்யன் என்று கூறுங்கள். நீங்கள் சாப்பிடும் போது அவனுக்கு மாற்றமாக வலது கையால் உண்ணுங்கள்” (ஆதாரம் : ஸஹீஹூல் ஜாமிவு 4ஃ47)
“நீங்கள் சாப்பிடும் போது ஒரு பருக்கை கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்துக்கொள்ளுங்கள்! ஷைத்தானுக்காக அதை விட்டுவிடாதீர்கள்” (ஆதாரம் :முஸ்லிம்)
(6) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுதல் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஷைத்தான் இறைவனிடம் உன்னுடைய அடியார்களை அவர்கள் உயிருடன் உள்ளவரை வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்று கூறினார். இறைவன் ‘அவர்கள் என்னிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் வரை என்னுடைய கருணையினால் மன்னித்துக் கொண்டே இருப்பேன்’ என்று கூறினான். (ஆதாரம் : அஹ்மத்)
ஆகையால் நாம் அல்லாஹ்விடமே திரும்பி பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நமது தந்தை ஆதம் (அலை) அவர்களிடம் அழகிய படிப்பினை உள்ளது. ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம்
‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’ என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:23)
இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!
இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!
(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).
இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.
(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).
நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!
ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.
(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)
அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?
ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.
(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது. இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.
மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)
இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் பல இயங்களிலும் ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)
இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.
ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங், ஆயுபோவன்போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.
கொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்
இந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே!
உலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா? என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.
இறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே! இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.
மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)
நான் வேலை செய்கிறேன், ஆனால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா? எல்லைகள் வகுக்க கூடாதா? அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.
அடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும்? வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா? போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா? இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும்?! நிம்மதி உண்டாகும்?!. எப்படி சண்டைகள் தீரும்?! இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா? அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி
தொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளில் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)
எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.
இன்று எமது ஊரிலும் படித்தவர்கள் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில பேர் ஸலாம் சொன்னாலும் பதில் சொல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையை நாம் பார்க்கின்றோம். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக!
இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோ,இச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.
இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -
1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -
சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய ‘சம இரவு தினம்’ (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.
2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-
கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று.
3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.
முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -
இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.
மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?
1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.
2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ‘யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.
3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?
4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்
5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -
a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d.. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.
பொய் பேசுவதன் தீமைகள்: -
1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -
அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)
3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி
4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?’ என்று கூறினர்; (அப்பொழுது) அவர், ‘(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)
5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
…
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலிஇ ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.
எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.