ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து வானில் சாம்பல் தூசி மண்டலம் பரவியுள்ளதையடுத்து உலகம் முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் உலக அளவில் விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.ஐஸ்லாந்தின் அயாபியாபிளாயெர்குதுல் (ay-yah-FYAH’-pla-yer-kut-duhl) பகுதியில் உள்ள பனி மலையில் உள்ள மாபெரும் எரிமலை கடந்த புதன்கிழமை வெடித்தது. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு பல கி.மீ. பகுதிகளில் பரவியுள்ளது.மேலும் எரிமலைக் குழம்பால் உருகிய பனி மலைகளால் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.எரிமலை வெடித்தபோது கிளம்பிய சாம்பல் புகை வானில் பல கி.மீ. தூரத்துக்கு சீறியது. இந்தப் புகை மண்டலம் வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எரிமலை அமைந்துள்ள இடத்திலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள பிரிட்டன் வானிலும் இந்த சாம்பல் பரவியது.இந்தப் புகையில் உள்ள சாம்பல் விமான என்ஜின்களையே செயலிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது என்பதால் இங்கிலாந்து ஜெர்மனி பிரான்ஸ் டென்மார்க் நார்வே ஸ்வீடன் பின்லாந்து பெல்ஜியம் அயர்லாந்து உள்பட வடக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடாவில் சுமார் 8000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதேபோல இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் உள்பட ஆசிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க வளைகுடா ஆஸ்திரேலியா உள்பட ஏராளமான நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா- ஐரோப்பா இடையிலான பெரும்பாலான விமானங்கள் ரத்தாகி விட்டன. இந்த சாம்பல் புகை மண்டலம் கலைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் கூட ஆகும் என்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.
இன்று வெளியிடப்பட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை கார்லோஸ் ஸ்லிம் பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்திலிருந்த மைக்ரோஸொப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். நியூ யோர்க்கின் ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்த புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி கார்லோஸ் ஸ்லிம்மின் சொத்துக்களின் பெறுமதி 53.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும் பில் கேட்ஸின் சொத்துக்களின் பெறுமதி 53.0 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இரண்டு இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சை அமெரிக்காவில் உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பின. அப்போது அவரது பேச்சை அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். எத்தனை சதவீதம் பேர் அவரது பேச்சை கேட்டனர் என்று நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில் அவரது செல்வாக்கு சரிந்து இருப்பது தெரிய வந்தது.
ஏனெனில் அவரது சமீபத்திய பேச்சை 48 மில்லியன் (4 கோடியே 80 லட்சம்) பேர் மட்டுமே கேட்டுள்ளனர். புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது முதல் பேச்சை 40 மில்லியன் (4 கோடி) மக்களே கேட்டனர்.
அதே சமயம் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 62 மில்லியன் (6 கோடியே 20 இலட் சம்) பேர் கேட்டனர்.
ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் 1993ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளின்டன் ஆற்றிய உரையை 66.9 மில்லியன் (6 கோடியே 69 லட்சம்) பேர் கேட்டனர். ஜனாதிபதி ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 52.3 மில்லியன் (5 கோடியே 23 இலட்சம்) பேர் கேட்டுள்ளனர்.
இதற்கு காரணம் அமெரிக்க மக்களிடையே ஜனாதிபதி ஒபாமா மேல் உள்ள கோபமே என தெரிகிறது. ஏனெனில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை வேலையில்லா திண்டாட்டம்இ அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது போன்றவையே காரணம் என கூறப்படுகிறது
ஹைதி நாட்டுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் பயணம்
ஹைதி தலைநகர் போர்ட்-அவ்-பிரின்ஸ் நகருக்கு சென்ற அவர், அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஹைதி மக்களின் பின்னால் ஐ.நா. சபை உறுதியாக நிற்கும் என்றும் உறுதி அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ஹைதி போன்ற சிறிய நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பமானது, சுனாமி போன்ற பேரழிவாகும். பெரிய அளவில் மனித உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அழிவு பற்றிய முழு விவரங்களும் இன்னும் தெரியவில்லை. தலைநகருக்கு வெளியே பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். நீங்கள் (ஹைதி மக்கள்) தனியாக இல்லை. நாங்கள் (ஐ.நா.) உங்களோடு இருக்கிறோம்” என்றார்.
ஐ.நா. சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும், நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. சபையை சேர்ந்த ஊழியர்களையும் பார்த்து பணிகளை துரிதப்படுத்தும்படி கூறினார்.