Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif

Category: Uncategorized

பாதையில் நடந்து சென்ற முதியவர் திடீரென மறைவு – அதிகாலையில் சம்பவம் - September 5, 2010 by MediaVoice

 இன்று அதிகாலையில் கியாமல்லைல் தொழுகை முடிந்து வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மௌலவி பைரூஸ் மௌலானா மாவத்தைப் பாதைக்கு அண்மையில்(சாவன்னா கடைக்கு முன்னால்) வெள்ளை நிற ஆடையணிந்த ஒரு முதியவர் நடந்து செல்வதை அவதானித்துள்ளார். தொழுகை முடிந்து செல்கின்ற ஒரவராயிருக்கலாம் என்ற நினைப்பில் தனது சைக்கிளில் அவரையும் ஏற்றிச் செல்வதற்காக சைக்கிளை நிறுத்திய உடனேயே இந்த நபர் மாயமாய் மறைந்துள்ளார். அவர் வலமாகவோ இடமாகவோ திரும்பிச் செல்லவில்லை என்பது உறுதியாகிய நிலையில் அதிர்ச்சிக்குள்ளாகிய மௌலவி பைரூஸ் அவர்கள் வேகமாக தனது மோட்டார் சைக்கிளை செலுத்தி வீடு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் பின்னரே தன்னைச் சுதாகரித்துக் கொண்டதாக கூறியதாக அறிய வருகின்றத. இதனிடையே இந்த சம்பவம் பற்றி மக்கள் இது ஜின்களின் நடமாட்டம் எனவம் பேய்களது நடமாட்டம் எனவும் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றனர்.

நோன்பின் மாண்புகளைக் காப்பது அனைவரினதும் கடமை – முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி இப்தார் நிகழ்வில் மௌலவி குலாம் - September 1, 2010 by MediaVoice

ரமழான் மாதத்தை அடைவதென்பது ஒவ்வொரு முஸ்லிமும் பெருகின்ற மாபெரும் பாக்கியமாகும். இந்த மாதத்தில் அனைவரும் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளை. அதன் மூலமாக ஒவ்வொரு முஸ்லிமும் தக்வா உள்ளவனாக மாற வேண்டுமென்பது அல்லாஹ்வின் எதிர்பார்ப்பு. நோன்பு நோற்க விதிவிலக்களிக்கப்பட்டவர்களும் நோன்புக்குரிய கண்ணியத்தைக் கொடுப்பது கடமை என முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளியில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் மௌலவி குலாம் தெரிவித்தார்.

ஆனால் இன்று முஸ்லிமல்லாதாரும் நோன்புக்கு கண்ணியம் கொடுக்கையில் முஸ்லிம்கள் நோன்பு பிடிக்காமல் நோன்பை அவமதிக்கின்ற நிலையைக் காணக்கூடியதாக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலையிலிருந்து எமது சகோதரர்கள் மாற வேண்டும். நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் மிக இரகசியமாக உண்ணுவதின் மூலமாக நோன்பின் மாண்புகளைக் காக்க வேண்டும். மாறாக இன்று சிலர் பகிரங்கமாக பகல் வேளைகளில் கடைகளில் சாப்பிடுவதையும் கள்ள நோன்பாளிகளுக்கென்று சில கடைகளில் விசேட மறைவுகளை ஏற்படுத்தி ஏற்பாடுகளை செய்துள்ளமையும் கவலையைத் தருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
பயான் பண்ணுவதும் உபதேசம் செய்வதும் மௌலவிமார்களின் தொழில் என்றும் அவற்றைக் கேட்பது நமது வேலையல்ல என்றும் சிலர் நினைப்பதையும், விமர்சிப்பதையும் கவலையுடன் சொன்னார். இவைகளைப் பற்றிப் பேசினால் மௌலவியை பள்ளியிலிருந்து விலக்க வேண்டுமென்று சிலர் பேசுவதாகவும் அவருக்கான சலுகைகளைக் குறைக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவை பற்றி மௌலவிமார் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்காதவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலை மாறி அனைவரும் ரமழானின் மூலமாக நிறைந்த இறையச்சமுள்ளவர்களாக மாற முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அல் ஹிதாயா நிறுவனத்தால் பேரீச்சம் பழம் வினியோகம்.- முஹியித்தீன் பள்ளி நிர்வாகம் ஏற்க மறுப்பு - August 31, 2010 by MediaVoice

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கொழும்பு அல்ஹிதாயா நிறுவனத்தினால் ஊர் ஜமாஅத்தினருக்கு வினியோகிப்பதற்காக  மௌலவி M.A.M. அலவி அவர்களிடம் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை வழங்கியிருந்தது. ஊரில் உள்ள மூன்று ஜூம்ஆப் பள்ளிகளுக்கும் இந்த பேரீச்சம் பழங்களை வழங்கி ஜமாஅத்தார்களுக்கு வினியோகிக்க அவர் தீர்மானித்து நிர்வாகிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் முஹியித்தீன் பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது.

ஏனைய இரண்டு பள்ளிவாசல்களும் அவற்றைப் பெற்று ஜமாஅத்தார்களிடையே பங்கீடு செய்தமை குறிப்படத் தக்கது. மறுத்ததற்கான காரணத்தை நாம் அறிய முயற்சித்த போதிலும் பொறுப்பானவர்களிடமிருந்து தெளிவான பதில் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு மறுக்கப்பட்ட 200 கிலோ பேரீச்சம் பழம் வேறு பிரதேசத்க்கு அனுப்பப் பட்டதாகவும் தகவல்

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம் - August 25, 2010 by MediaVoice

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

நபி (ஸல்) கூறினார்கள்:
இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)

ரமழானின் சிறப்பு
இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:

- இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
- ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
- ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது.

எனவே குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
- நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக மணமுடையது,
- இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.

மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்

ரமழானில் அமல்கள்
ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையான நோன்பு

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)

வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:

“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)

“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவு நேரத் தொழுகை

நபி (ஸல்) கூறினார்கள்:

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)

இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

3. தருமம்

“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)
தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.

4. குர்ஆன் ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்

நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.

இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா

“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்

“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)

எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை

நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

-குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி,முஸ்லிம்)

- பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.

- உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். ( அபூதாவூத்)

- இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு (Balm) தடவிக்கொள்ளுதல் வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கப்படாதவை
- உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)

எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)

- இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)

- வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சலுகையளிக்கப்பட்டவர்கள்

நோயாளிகள்,கர்ப்பிணிப்பெண்கள்,பாலூட்டும்தாய்மார்கள்,பிரயாணிகள்இ தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள்! - August 18, 2010 by MediaVoice

வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!

“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:271)

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!

நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:

1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன்.
6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்
7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)இ ஆதாரம் : புகாரி

செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவதால் நன்மைகள் பாழாகிவிடும்!

அல்லாஹ் கூறுகிறான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

சொர்க்கம் நுழையாத மூவர்!

“சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயிஇ திர்மிதி)

மேற்கண்டவைகளிலிருந்து பெறும் படிப்பினைகள்:

1.தான தர்மங்களை வெளிப்படையாக செய்தாலும் நல்லது! ஆனால் மறைத்து செய்வது அதை விடச் சிறந்தது

2.வலகு கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக தர்மம் செய்தால் மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்.

3.செய்த தர்மத்தை அல்லது உதவியை சொல்லிக்காட்டி நிந்தனை செய்தால் நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும்.

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள் - August 17, 2010 by MediaVoice

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவிற்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.

நோன்பாளிகளே உங்களைத்தான்! - August 16, 2010 by MediaVoice

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

  • 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.

  • சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை  ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!

  • உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.

  • ழூ ‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.

  • புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகா திருப்பது நோன்பின் பலனை அழித்தவிடும்.

  • ‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.

  • ‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.

  • ‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.

  • ‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.

  • ‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!

  • சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

  • ‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

  • ‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப் தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற் கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.

  • பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

  • ‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டணைக்குரிய குற்றமாகும்.

  • எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!

இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக!

- July 6, 2010 by Media Voice Of Kahatowita
அன்புள்ள வாசகர்களே!
கஹடோவிடவின் முன்னோடி இணையத்தளமான எமதுதளம் வெகுவிரைவில் உரிய தராதரத்துடனும் புதுப்பொலிவுடனும் தோற்றமளிக்கும், இன்ஷா அல்லாஹ்!

அல் பத்ரியாவில் கல்வி நிலை வீழ்ச்சி – சா.தர மாணவர்கள் மிக மோசமாகப் பாதிப்பு - June 11, 2010 by Media Voice Of Kahatowita
அல் பத்ரியாவின் கல்வி நிலை நாளுக்கு நாள் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதையிட்டு ஊர் மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். அண்மைக்காலமாக பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காத நிலையிலேயே அதிகமான வகுப்புகள் காணப்படுகின்றன. விசேடமாக இவ்வாண்டு க.பொ.த. சாதாரண தரப் பர்Pட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்ற சில ஆசிரியர்களின் அசமந்தப் போக்கு மற்றும் மாணவர்கள் சிலரின் ஒழுக்கவீனம் என்பன இந்த வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. தனது மகனின் சுகவீனம் காரணமாக பாடசாலை விடயங்களை முழுமையாகக் கவனிக்க முடியாத நிலைக்கு அதிபர் தள்ளப்பட்டுள்ளதால் இந்நிலை மேலும் மோசமடைந்தள்ளது.
பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் பலரை சில பெற்றோர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசிய போதும் பலனில்லாத நிலையில் கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்ய சில பெற்றோர் தயாராகி வருகின்றனர்.

- February 21, 2010 by Media Voice Of Kahatowita

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.

அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.

இந்த  பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகுஇ அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் ‘பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

இறைவன் திருமறையில்..

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34)


« old entrys
Daily hadees
------
Recent Comments